Thursday, December 6, 2018

இடையளவு இரகசியம் - 46

இடையளவு இரகசியம் - 46

------------------------------------------------

உடற்பயிற்சியை, இரண்டு வகையாக பிரிக்கலாம்.  

ஏரோபிக்(AEROBIC) 
அன்-ஏரோபிக்(ANAEROBIC)
  
ஏரோபிக்(AEROBIC), உடற்பயிற்சி என்பது ஆக்சிஜனுடன் சேர்ந்து செய்யும் உடற்பயிற்சி.  அன்-ஏரோபிக்(ANAEROBIC) உடற்பயிற்சி என்பது ஆக்சிஜன் இல்லாமல்  செய்யும் உடற்பயிற்சி.

ஆக்சிஜன் இல்லாமல் என்பது, தசைகளுக்கு ஆக்சிஜன் போய் சேர்வதற்குள், அந்த தசை வேலை செய்துவிடும்.       

உடற்பயிற்சி என்பது, நம் தசைகளை சுருக்குதல், நீட்டுதல்தான். இதற்கு சக்தி தேவை படுகிறது. இந்த சக்தியை தருவது ATP(ADENOSINE TRIPHOSPHATE). 

ஏரோபிக்(AEROBIC) உடற்பயிற்சியில், தசைகளுக்கு ATP, ஆக்சிஜனுடன் சேர்ந்து செயலாற்றும் முறையால், தயாரித்து அளிக்கப்படுகிறது. 

அன்-ஏரோபிக்(ANAEROBIC) உடற்பயிற்சியில், தசைகளுக்கு ATP, உடனடியாக தேவைபடுகிறது என்பதால்,  ஆக்சிஜன் இல்லாமல், வேறு முறையால், தயாரித்து அளிக்கப்படுகிறது.

நீங்கள் செய்யும் உடற்பயிற்சி,  ஏரோபிக் அல்லது அன்-ஏரோபிக் என்பதை பொருத்துதான், நம் உடல்,  சக்தி வழிமுறைகளை தேர்ந்தெடுத்துகொள்ளும்.

நடைபயிற்சி, நீந்துதல், மாரத்தான்(ஓடுதல்) போன்ற நீண்ட நேர தொடர்பயிற்சிகள் எல்லாம், ஏரோபிக் வகைகளை சார்ந்தது. இதற்கு தசைகளுக்கு தேவையான ATP, ஆக்சிஜனுடன் சேர்ந்து, பல தொடர் வினைகளுடன் செயல்பட்டு, ATP தயாரிக்கப்பட்டு, தொடர்ந்து தசைகளுக்கு கொடுக்கப்படும். இதனால்தான் நாம் தொடர்ந்து நீண்ட நேரம் உடற்பயிற்சி அல்லது வேலைகளை செய்யமுடிகிறது.

நீங்கள் கோவிலை சுற்றி வலம் வருவது, பாதயாத்திரை செல்வது, வீட்டு வேலைகளை செய்வது எல்லாம் ஏரோபிக்தான்.   

பளு தூக்குதல், வேகமான ஓட்டம்(100 மீட்டர்) போன்ற குறைந்த நேரத்தில் செய்யப்படும், தீவிரமான உடற்பயிற்சிகள் எல்லாம், அன்-ஏரோபிக் வகைகளை சார்ந்தது. இதற்கு தேவையான ATP, தசைகளுக்கு உடனடியாக தேவைப்படுகிறது. ஆக்சிஜன் தசைகளுக்கு போய் சேர்வதற்கு முன்பே, தசைகள் செயல்படவேண்டியதாக இருக்கிறது. 

நீங்கள் நடந்து செல்லும்போது, எதிரே தீடிரென்று ஒரு வாகனம் வேகமாக வந்துவிட்டால், உடனே தப்பிப்பதற்காக, ஓரமாக ஓடுவது. கரப்பான் பூச்சியை பார்த்தால், தாவி குதித்து ஓடுவது போன்றவைகள் எல்லாம் அன்-ஏரோபிக் வகைகளை சேர்ந்தது.        

அன்-ஏரோபிக் செயல்களுக்கு, தசைகளில் சேமிக்கப்பட்டிருக்கும் ATP பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தசைகளில் குறைந்த அளவுதான் ATP சேமிக்கபட்டிருக்கும், எனவேதான் தீவிரமான(வேகமான) பயிற்சிகள் குறைந்த நேரமே செய்யமுடிகிறது. அதிக நேரம் செய்தால் களைப்பு அல்லது தசைகளில் வலி வருகிறது. இதற்கு என்ன காரணம் என்பதை பின்னால் பார்ப்போம்.  

இப்படி எல்லா வேலைகளுக்கும் ATP தேவைப்படுகிறது. 

ATPயை உடல் தயாரிக்கும் முறைதான் வேறுபடுகிறது. அந்த வழிமுறைகள்தான், சக்தி வழிமுறைகள்(ENERGY PATHWAYS) என்று அழைக்கபடுகிறது.

மாரத்தான் என்பதும் ஓடுதல் என்கிற பயிற்சிதான், 100 மீட்டர் ஓட்டம் என்பதும் ஓடுதல் என்கிற பயிற்சிதான். ஆனால் ஓடும் நேரம் மற்றும் தீவிரம் வேறுபடுகிறது. 

மாரத்தான் ஓடி முடிக்கும் வரை, தசைகள் மெதுவாக ஆனால் அதிக நேரம் வேலை செய்யவேண்டும், அதுவரை அந்த தசைகளுக்கு, நாம் தொடர்ந்து ATPயை கொடுத்துகொண்டே இருக்கவேண்டும். 

100 மீட்டர் ஓட்டம் என்பது, குறுகிய நேரத்தில், அதிக தீவிரத்துடன் ஓடினால்தான் வெற்றிபெற முடியும். அதற்கு தசைகள் தீவிரமாக வேலை செய்தாகவேண்டும். அதற்கேற்ப அந்த தசைகளுக்கு ATPயை, உடனடியாக கொடுத்தாக வேண்டும்.

இதற்காக நம் உடலுக்குள், பல மாயாஜால வேலைகள் நடைபெறுகிறது. நீங்கள் எந்த மாதிரி உடற்பயிற்சி அல்லது வேலை செய்கிறீர்கள் என்பதை பொருத்து, உடல் அதற்கேற்ப ATPயை தயாரிக்கும் மற்றும்  தசைகளுக்கு கொண்டு செல்லும் முறைகளையும் மாற்றிக்கொள்ளும்.                      

இதை நமக்கேற்றமாதிரி, கொஞ்சம் மாற்றி யோசித்தால், எந்த சக்தி வழிமுறையை தேர்ந்தெடுத்தால், கொழுப்பு குறையும், என்பதை கண்டுபிடித்து, அந்த சக்தி வழிமுறையை,  நம் உடலை தேர்ந்தெடுக்க வைக்கவேண்டும். இதில்தான் உங்கள் சாமர்த்தியம் உள்ளது. (SMART WAY)        

நம் உடலில் எத்தனை சக்தி வழிமுறைகள் உள்ளது? 

தொடரும்.

No comments:

Post a Comment