Sunday, September 9, 2018

இடையளவு இரகசியம் - 43

இடையளவு இரகசியம் - 43
-----------------------------------------------



சேமிப்பு கொழுப்பு குறைவதற்கு பின் இருக்கும் அறிவியல் இரகசியம் என்ன?


கொழுப்பு குறையவேண்டும் என்றால்

1. கார்போஹைட்ரேட் குறைய வேண்டும்
2. கிளைக்கோஜன் சேமிப்பும் குறைய வேண்டும்.
3. இன்சுலின் அளவும் குறைய வேண்டும்

நம் உடல் மேலே சொன்ன நிலைமைக்கு வரும்போது, கார்போஹைட்ரேட்டும், கிளைக்கோஜனும் இல்லாததால் அது சக்திக்காக, சேமிப்பு கொழுப்பை உபயோகிக்க ஆரம்பிக்கும். இது நமக்கு தெரியும்.

நம் உடல் எப்படி கொழுப்பை சக்தியாக மாற்றுகிறது?
இங்கேதான், அந்த இரகசியம் மறைந்திருக்கிறது.

கொழுப்பு முதலில், அசிடைல் கோ வாக மாறினால்தான் நமக்கு சக்தி கிடைக்கும் என்பதையும் நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

கொழுப்பு, அசிடைல் கோ வாக மாறுவதற்கு, இரண்டு நிலைகளை கடக்கவேண்டும்.

1. லிப்போலைசிஸ் (LIPOLYSIS)
2. பீட்டா ஆக்ஸிடேசன் (BETA OXIDATION)

லிப்போலைசிஸ் (LIPOLYSIS) இதைப்பற்றி நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

லிப்போலைசிஸ் (LIPOLYSIS) என்பது, கொழுப்பு செல்களிலிருந்து, கொழுப்பை உடைத்து, கொழுப்பு அமிலங்களை (Free Fatty Acids - FFA) வெளியே கொண்டுவரும் முறை என்று நமக்கு தெரியும்.

பீட்டா ஆக்ஸிடேசன் (BETA OXIDATION) என்பது, கொழுப்பு அமிலங்களை (Free Fatty Acids – FFA) அசிடைல் கோ வாக மாற்றும்.

லிப்போலைசிஸ் (LIPOLYSIS), கொழுப்பு செல்களில் (ADIPOSE TISUES) நடைபெறும்.

பீட்டா ஆக்ஸிடேசன் (BETA OXIDATION), தசைகளில் (MUSCLE) நடைபெறும்.

லிப்போலைசிஸ் (LIPOLYSIS), பீட்டா ஆக்ஸிடேசன் (BETA OXIDATION) இரண்டும் சரிவர நடந்தால்தான், கொழுப்பு அசிடைல் கோ வாக மாறும்.

கொழுப்பு அசிடைல் கோ வாக மாறினால்தான் அதை சக்திக்காக உபயோகிக்கமுடியும்.


சரி இதில் என்ன பிரச்சனை?


நாம் முதலில் பார்த்த, கார்போஹைட்ரேட் குறைய வேண்டும் கிளைக்கோஜன் சேமிப்பும் குறைய வேண்டும். இன்சுலின் அளவும் குறைய வேண்டும் என்பதெல்லாம் லிப்போலைசிஸ் முறைக்குத்தான் உதவும்.

நாம் சாப்பிடாமல், உடற்பயிற்சி செய்தால், லிப்போலைசிஸ் (LIPOLYSIS), அதிகமாக நடக்கும். கொழுப்பு செல்களிலிருந்து அதிகமாக கொழுப்பு அமிலங்கள்(Free Fatty Acids - FFA) விடுபட்டு இரத்தத்தில் அதிகமாக சுற்றி வரும்.

இந்த விடுபட்ட கொழுப்பு அமிலங்கள், தசைகளில் உள்ள செல்களின் மைட்டோகாண்டிரியாவுக்குள் புகுந்து, பீட்டா ஆக்ஸிடேசன் (BETA OXIDATION), முறையில் அசிடைல் கோ வாக மாறினால்தான் கொழுப்பு குறையும்.

பீட்டா ஆக்ஸிடேசன் (BETA OXIDATION) முறை ஒரு “RATE LIMITING STEP”.

RATE LIMITING STEP என்பது வரிசையாக நடைபெறும் செயல்களில், எந்த செயல் மிகவும் மெதுவாக நடைபெறுமோ. அந்த செயலின் வேகம்தான், மொத்த செயலின் வேகம்.

ஒரு நான்கு பேர், நடந்து போகிறீர்கள் என்றால், அதில் குண்டாக, நடக்கமுடியாமல், யாராவது ஒருவர் இருந்தால், அவரின் வேகத்திற்கேற்பதான் மற்றவர்களும் நடக்கமுடியும். அவரை விட்டுவிட்டும் போக முடியாது. இதில் அந்த நபர்தான் “RATE LIMITING STEP”. நபர்.

அதாவது பீட்டா ஆக்ஸிடேசன் (BETA OXIDATION), ஒரு மெதுவான முறை. கொழுப்பு அமிலங்கள் விடுபடும் வேகத்திற்கு, ஈடுகொடுத்து, வேகமாக வேலை செய்வதில்லை.

அதுவும் நடைப்பயிற்சி போன்ற ஏரோபிக் பயிற்சிகளின் போது இது மெதுவாக வேலை செய்யும். நாம் சாப்பிடாமல், நடைப்பயிற்சி செய்தால், லிப்போலைசிஸ் (LIPOLYSIS), அதிகமாக நடக்கும். கொழுப்பு செல்களிலிருந்து அதிகமாக கொழுப்பு அமிலங்கள்(Free Fatty Acids - FFA) விடுபட்டு இரத்தத்தில் அதிகமாக சுற்றி வரும். ஆனால் பீட்டா ஆக்ஸிடேசன் (BETA OXIDATION) அதற்கேற்ற வேகத்தில் நடைபெறாது.

சரி இப்போ வெளியே வந்த, பீட்டா ஆக்ஸிடேசன் ஆகாத கொழுப்பு அமிலங்கள் என்னவாகும்?

பீட்டா ஆக்ஸிடேசன் ஆகாத கொழுப்பு அமிலங்கள், “போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோட” என்கிற கதைபோல், திரும்பவும், கொழுப்பாக மாறிவிடும்.

இதனால்தான் சாப்பிடாமல் உடற்பயிற்சி செய்தாலும், சாப்பிட்ட பின் உடற்பயிற்சி செய்தாலும், குறையும் கொழுப்பில் பெரியளவில் வித்தியாசம் இல்லை.

சரி இந்த பீட்டா ஆக்ஸிடேசன் (BETA OXIDATION) முறையை அதிகப்படுத்துவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?


தொடரும்

No comments:

Post a Comment