Wednesday, November 7, 2018

ஆட்டோகிராப் - 2018

ஆட்டோகிராப் - 2018

********************

பரபரப்பான நகர்
அதன்
மைய பகுதியின்
ஒரு மதிய வேளையில்
அவர்களின்
தீடிர் சந்திப்பு

நீங்க...... பத்மாதானே !
ஆமாம்  நீங்க......?
அவனை
அவனே அறிமுகபடுத்திகொண்டான்
பரிச்சயமானவனில்லை
அவன் ஒன்றும் அவளைப்போல
கல்லூரியில்......

பேச்சுபோட்டி
அவளே முதலிடம் .....
நடனம்
அவளே முதலிடம்....
படிப்பிலும்
அவளே முதலிடம்

சிவந்த மேனி
அடர்ந்த கேசம்
அளவான உயரம்
பளிங்கு கண்கள்
அவளது
இளமை எனும்
இலக்கணம் மட்டும்
கால சுழற்சியில்
கொஞ்சம்
இடம் பெயர்ந்திருந்தது

அருகே அமைந்த
உணவகத்தில்
ஆளுக்கொரு தேநீருக்கு
ஒப்புகை அளித்துவிட்டு
அமர்ந்திருக்கையில்
அமைதியை
அவளே முன் கலைத்தாள்

இரண்டு பெண் குழந்தைகள்
டாஸ்மாக்கில்
காசாளர் பணி கணவனுக்கு
வாழ்வு சிறக்கவில்லை
வார்த்தைகளால் நிரப்பிக்கொண்டிருந்தாள்
அப்பொழுதை......

ஏக்கமாய்
காதில் வாங்கிகொண்டு
பத்தாண்டுகளுக்கு
பின்னால் ஓடிகொண்டிருந்தான்
அவனும்.....

அவள் நாமத்தை
உச்சரிப்பவர்களை கூட
அழகாய் பார்த்த
அக்காலம் நோக்கி

அப்போதெல்லாம்
பயமும் பதற்றமும்
அவனுடனே பயணிக்கும்
அவளை கடக்கும்
ஒவ்வொரு முறையும்

தேநீரை .....
பருகுங்கள் மகேஷ்
அவனை
அவன் நிலைக்கு கொண்டுவந்தாள்
ஆமாம்.... நீங்க ?

அரசுப்பணி
அன்பான துணைவி
ஆண் குழந்தையொன்று
என சொல்லி முடித்து
எழ எத்தனிக்கையில்
தேநீர்துளி பட்டு
சட்டைபை
சிறியதோர் கறையானது

காலமதன் மாற்றங்களை
கணிக்க இயலாமல்
கறையை கழுவி விட்டு
கைகூப்பி
விடைபெற்றான் அவனும்
அவள் நினைவுகளை
கழுவ இயலாமல்......


நன்றி:
           - பாவலர்
             கவிதை.சூர்யா, நெய்வேலி.
            ( ‎குறிஞ்சிக்குடி)






No comments:

Post a Comment